Wednesday 26 April 2017

கிரக காரகங்கள்



குருவின் காரக விளக்கங்கள்
கிரகங்களில் உருவத்தில் மிகப்பெரியது குருவாகும். இந்த கிரகம் அதிவேகமும் இல்லாமல் மந்த வேகமும் இல்லாமல் மித வேகத்தில் நகர்ந்து செல்லும் கிரகமாகும். குருவின் நிறம் மஞ்சளாகும். குருவிலிருந்து வரும் மஞ்சள் நிறக்கதிர்களே சூரியனின் வெப்பத்தை குறைத்து பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு வழி வகை செய்கிறது. இதன் காரணத்தால் குருவை ஜோதிடத்தில் ஜீவக்காரகன் அல்லது உயிர்க்காரகன் என அழைக்கிறார்கள். முட்டையை உடைத்துப்பார்த்தால் அதன் உட்கரு மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறம் குருவினுடையது. இதன் மூலம் உயிர்கள் தோன்றுவதில் குருவிற்கு இருக்கும் முக்கிய பங்கினை புரிந்துகொள்ளலாம்.
குருவானது உருவத்தில் பெரிய கிரகம் என்பதால் மனிதர்களில் முழுமையாக வளர்ச்சி பெற்ற மனிதர்களை குறிக்கிறது. அதாவது நடு வயதில் உள்ள மனிதர்களை குறிக்கிறது.
குரு உருவத்தில் பெரியதாக இருப்பதால் மற்ற கிரகங்களின் தாக்கம் குருவின் முன்னால் தோற்றுப்போய்விடுகின்றன. இதனால்தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுகிறார்கள். அதாவது சிறிய காந்த துண்டுகளை பெரிய காந்த துண்டுகள் கவர்ந்து இழுத்துக்கொள்ளும். கிரகங்கள் எல்லாம் பூமியைப்போல் காந்த துண்டுகளே.
உடல் பருமன் என்பது உடலில் அதிகம் கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது. பெரிய உருவம் கொண்டது குரு , எனவே கொழுப்புக்கு அதிபதி குருவாகும். மேலும் கொழுப்பு சத்துள்ள நெய், வெண்ணெய் போன்ற பதார்த்தங்கள் குருவிற்கு உரியவையாகும்.
ஒரு மனிதனை உயிரோடு வைத்திருப்பது பிராண சக்தி என்னும் மூச்சுக்காற்றாகும்.உயிர்க்காரகம் பெற்ற குரு ,பிராண சக்தியை குறிக்கிறார். பிராண சக்தி மூக்கின் வழியே சுவாசிப்பதன் மூலம் கிடைக்கிறது. எனவே மூக்கை குறிக்கும் கிரகம் குருவாகும்.
உருவத்தில் பெரிய கிரகம் குரு என்பதால் உடல் உறுப்புகளில் பெரியவை குருவுக்கு உரியனவாகும். உடல் வெளி உறுப்புகளில் மிகவும் பெரியது தொடியாகும். தொடையில்தான் அதிகம் கொழுப்பு தங்கியிருக்கும். உடல் உள்ளுறுப்புகளில் பெரியது கல்லீரலாகும். எனவே தொடை மற்றும் கல்லீரலை குறிப்பது குருவாகும்.
குரு மஞ்சள் நிறமுடையது என்பதால் மஞ்சள் நிற உலோகமான தங்கம், மஞ்சள் நிற ரத்தினமான புஷ்பராகம், மஞ்சள் நிற மலரான முல்லை ஆகியவை குருவிற்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது.
உருவத்தில் பெரியதும், நீண்ட சுவாசத்தை  உடையதும், நிதானமான நடையுடையதுமான யானை குருவிற்குரிய விலங்காகும்.
உருவத்தில் பெரியதாகவும், அதிகப்படியாக பிராண சக்தியை வெளியிடும் மரங்களான ஆல மரம், அரச மரம் போன்றவை குருவிற்குரியவையாகும்.
குருவின் நிறமும் மஞ்சள் , தீபம் மற்றும் ஹோமத்தீயின் நிறமும் மஞ்சள். தீபம் இல்லாத இறை வழிபாடு கிடையாது. மஞ்சள் பொடி, மஞ்சள் கனியான எலுமிச்சை, வாழப்பழம் போன்றவை இறை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. எனவே இறை வழிபாட்டைக்குறிக்கும் கிரகம் குருவாகும்.
குருவின்  நிறம் தீப நெருப்பை ஒத்திருக்கிறது. தீபங்களும், தீப்பந்தங்களும்  இருட்டை விலக்கும் வேலையை செய்கின்றன. குரு என்ற சொல்லின் பொருளும் இருட்டை நீக்குவது என்பதுதான். குருவும் உருவ பலத்தால் அனைத்து கிரக தோசங்களையும் நீக்கும் வலிமையுடையது. எனவே குருவை வழிகாட்டி, ஆசிரியர், குரு நாதர், நலம் விரும்பி என அழைக்கிறார்கள்.
மனிதனுக்கு இயற்கையாக பூமியில் அதிக பிராண சக்தியும்,காந்த சக்தியும் வட கிழக்கு திசையிலிருந்து கிடைக்கிறது. இதானால் வாஸ்து சாஸ்திரத்தில் வட கிழக்கு மூலையை குரு மூலை அல்லது ஈசான்ய மூலை என அழைக்கிறார்கள். மூக்கை அடைத்துவிட்டால் மனிதன் சுவாசிக்க முடியாமல் இறந்து விடுவான் , அது போல் வீட்டில் ஈசான்ய மூலையை முழுவதுமாக மூடிவிட்டால் வீட்டில் இறப்புகள் நிகழும், சந்ததிகள் வளராது.
வாசி யோகம் என்னும் பிராணயாம பயிற்சி ஆன்மீகத்தோடு தொடர்புடையது. இது மூக்கை பிடித்து பயிலும் கலை என்பதால் , மூக்குக்கு காரகனான குருவே இந்த கலைக்கும் அதிபதியாகும்.

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்