Monday 24 April 2017

அடிப்படை ஜோதிட பாடங்கள்

கிரக காரக விளக்கம் -சூரியன்
---------------------------------

 வானத்தையும் பூமியையும் ஒப்பிடும் ஒரு கலையே ஜோதிடமாகும். ஜோதிடத்தில் கிரக காரகம், ராசிக்காரகம், பாவ காரகம் என மூன்று முக்கிய உறுப்புகள் உள்ளன. இந்த மூன்று முக்கிய உறுப்புகளைக்கொண்டுதான் ஜோதிட விதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் கிரக காரகம் என்பது வெறும் கற்பனை என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் இதை ரிஷிகளின் கண்டுபிடிப்பு, அதனால் இதற்கு யாரும் எந்த விளக்கமும் கேட்காமல் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வாதிடுகிறார்கள். இதை ஆய்வு நோக்கில் யாரும் அனுகவில்லை என்ற பரிதாப நிலையே இன்றளவும் காணப்படுகிறது. என் அறிவுக்கு எட்டியவரை இவை எதுவும் கற்பனை இல்லை, இவை ஒரு ஓப்பீட்டியலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை என்பதை விளக்க முயற்சிக்கிறேன்.
 இந்த கிரக காரகம் என்பது கிரகங்களை கண்களால் பார்த்து அவைகளின் தோற்றத்தை வர்ணிக்கும் ஒரு வர்ணனைகளாகவும் , அவைகளின்  தோற்றத்தை பூமியில் உள்ளவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு உவமைகளாகவும் அமைந்துள்ளன. அதாவது நாம் ஒரு கிரகத்தை கண்களால் பார்த்து அதன் தோற்றத்தை விவரித்தால் எப்படி விவரிப்போம். அந்த விவரணைதான் கிரக காரகமாகும். ஒரு கிரகத்தின் வடிவம்(அளவு), அதன் நிறம், அதன் சுழற்சி வேகம், அது வானத்தில் நின்ற இடம், அது செயல்படும் விதம் இது போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டுதான் கிரக காரகங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
 முதலில் சூரியனின் காரகங்கள் எப்படி நிர்ணயிக்கப்பட்டன என்று பார்ப்போம். சூரிய குடும்பத்தில் கோள்களுக்கு ஒரு மையப்புள்ளியாக அமைந்துள்ளது சூரியனாகும். சூரியனை மையமாகக்கொண்டுதான் கோள்கள் சுற்றிவருகின்றன. சூரியன் ஸ்திரமாக மையத்தில் நிற்கிறது. சூரியன் எந்த கோளையும் சுற்றவில்லை. ஒரு குடும்பம் என்றால் அந்த குடும்பத்தலைவரை மையமாகக்கொண்டுதான் அந்த குடும்பம் இயங்கும். ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஊர்த்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டே அந்த ஊர் இயங்கும். ஒரு  நாடு  என்று எடுத்துக்கொண்டால் அந்த நாட்டுத்தலைவரை மையமாகக்கொண்டே அந்த நாடு இயங்கும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு குடும்பத்தலைவன் (தந்தை), ஊர்த்தலைவன், நாட்டுத்தலைவன், நிர்வாகி,அரசன், அதிகாரி போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒன்பது கிரகங்களில் சூரியனைத்தவிர பிற கிரகங்களை கண்ணால் பார்க்காதவர்கள் இருக்கலாம்,அணால் சூரியனை பார்க்காத ,சூரியனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த ஓப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு புகழ், கீர்த்தி, பிரபலம் போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 சூரியனை தன்னை சுற்றிவரும் பிற கிரகங்கள் ,தங்கள் சுற்றுப்பாதையை விட்டு விலகாமல் , அந்தந்த கிரகத்தை, அதனதன் சுற்றுப்பாதையிலேயே சுற்றிவருமாறு இழுத்து பிடித்து வைத்துள்ளது. சூரியன் கிரகங்களின் மையத்தில் இல்லையென்றால் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து விடும். இதுபோல் மனித உடலில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த இடத்திலேயே இருக்க, உடலுக்கென்று ஒரு உறுவ அமைப்பைக்கொடுத்து அது சிதைந்து போகாமல் , அனைத்து உறுப்புகளையும் அதனதன் இடத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டிருப்பது எலும்பாகும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் எலும்புக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்திருக்கிறார்கள்.
 மனித உடம்பில் சூரிய ஒளி அதிகமாக படும் இடம் சிரசாகும். சிரசுக்குள் இருக்கும் மூளையானது சூரிய ஒளி சிரசில் படும் பகல் நேரத்தில் முழுமையாக செயல்படுகிறது. சூரிய ஒளி சிரசில் விழாத இரவு நேரத்தில் மூளை ஓய்வெடுத்துக்கொள்கிறது. மூளை ஓவ்வெடுக்கும் சமயத்தில் ஒட்டுமொத்த உடம்பும் களைப்பில் தூங்கி விடுகிறது. இதன் அடிப்படையில் சிரசு, மூளை, உடல் தெம்பு,உற்சாகம், உயிர்ப்பு போன்ற காரகங்கள் சூரியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயினமும் தோன்றாது. உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக கருதப்படுகிறான். இதன் அடிப்படையில் சூரியன் பித்ருக்காரகன்(தந்தை) என அழைக்கப்படுகிறான்.
 இறைவன் ஒளி வடிமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இறைவனை ஒளி வடிவத்தில் கண்டதாக பல மகான்கள் தங்கள் அனுபவத்தில்  கண்டு கூறியிருக்கிறார்கள். சூரியன் ஒளி வடிவமாக இருப்பதால் பரமாத்மா என அழைக்கப்படுகிறான்.
 வெளிச்சமே உயிரினங்களுக்கு கண் பார்வையைத்தருகிறது . வெளிச்சமில்லாமல் கண்களால் எதையும் பார்க்க முடியாது. அந்த வெளிச்சத்தை தரும் கிரகம் சூரியன் என்பதால் கண் பார்வைக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் வலது கண்ணைக்குறிக்கும் கிரகம் சூரியன் என கூறப்பட்டுள்ளது.மேலும் வெளிச்சம் தரும் தீபம் சூரியக்குரிய காரகமாகும்.
 சூரியனின் நிறம் இளம் சிவப்பாகும். சூரிய ஒளியில் மலரும் செந்தாமரை சூரியனுக்கு உரிய மலராக கூறப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் கோதுமை சூரியனுக்குரிய தானியமாக கூறப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் உள்ள மாணிக்கம் சூரியனுக்குரிய ரத்தினமாகும். சூரியனின் நகர்வுக்குத்தகுந்தவாறு தன் தலையை எப்பொழுதும் சூரியனை நோக்கி நகர்த்தும் சூரிய காந்திப்பூ சூரியனுக்குரிதாகும்.
 சூரியன் வெளிச்சத்தை மட்டுமல்லாமல் உஷ்ணத்தையும் தருகிறது. உடலில் உஷ்ணத்தை பெருக்கும் மிளகாய்,பூண்டு, மிளகு,இஞ்சி,சுக்கு போன்ற காரத்தன்மையுள்ள   பொருட்கள் சூரியனுக்கு உரியவையாக கூறப்பட்டுள்ளது.
 சூரியனின் ஒளி படாத ஒரு உயிரினம் உலகில் இருக்க முடியாது. எனவே சூரியனுக்கு ஆதர்ச பிரேமி என்று பெயர். அதாவது சூரியன் தன் கிரணங்களால் எல்லோரையும் தழுவிக்கொள்பவனாகும். அதாவது எல்லோரையும் நேசிப்பவனாகும். இதன் அடிப்படையில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் குணம் சூரியனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சூரியனை சமூக சேவகன் என்றும், மானிடப்பிரியன் என்றும் கூறுகிறார்கள்.
 சூரியன் ஒரு நாளும் தன் கிரணங்களை பூமியில் உள்ள ஜீவ ராசிகளின் மீது பாய்ச்ச தவறியதில்லை. ஒரு நாள் கூட உதயமாகாமல் போனதில்லை. இதனால் சூரியனை நம்பிக்கைக்கு பாத்திரமானவன் என குறிப்பிடுகிறார்கள்.
 சூரியன் எப்பொழும் ஒளியையும், உஷ்ணத்தையும் உயிர்களுக்கு பாரபட்சமின்றி வாரி வாரி வழங்கி வருவதால், தாராள குணமுடையவன் என்றும், வள்ளல் என்றும் அழைக்கப்படுகிறான்.
 மனித உடலில் சிரசு அதிக சூரிய ஒளியை பெறுவதுபோல் ,பூமியில் உள்ள உயரமான மலைகளும், உயர்ந்த கட்டிடங்களும் அதிக சூரிய ஒளியை பெறும். எனவே மலைகள்,கோட்டை கொத்தளங்களை குறிக்கும் கிரகம் சூரியனாகும். தலையில் வைக்கப்படும் கிரீடம், தலைப்பாகை, வீட்டின் கூரை போன்றவை சூரியனுக்குரியவையாகும்.
 தேவர்களின் தலைவனான இந்திரன் சூரியன் உதிக்கும் கிழக்கு திசைக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளான்.நெருப்பு அம்சமான ருத்திரன் சூரியனுக்கு தேவையாக நியமிக்கப்படுள்ளான்.
 பல நோய்களை குணமாக்கும் ஆற்றல் சூரிய ஒளிக்கு உள்ளது. இதனால் சூரியனுக்கு தன்வந்திரி என பெயர் வைத்திருக்கிறார்கள். எனவே மருந்தில்லாத மருத்துவத்தை குறிக்கும் கிரகம் சூரியனாகும். வர்மக்கலை, இயற்கை மருத்துவம், நுண் அழுத்த சிகிச்சை, நுண் துளை சிகிச்சை, தொடு சிகிச்சை, பிராண சிகிச்சை, ரேய்கி சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற மாற்று மருத்துவ முறைகள் சூரியனுக்குரியவையாகும்.
 உடல் முழுவதும் சக்தியைப்பரவச்செய்யும் ஜடராக்னியானது (Solar plex) சூரினைக்குறிக்கும்.
 சூரியன் எதையும் மறக்காமல், மறைந்திருப்பதைக்கூட வெளிச்சம் போட்டு காட்டுபவன் என்பதால் , நிர்வாணம், திறந்த மனது, வெளிப்படைத்தன்மைகள் சூரியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 எல்லா கிரகங்களும் சூரியனின் ஒளியைத்தான் பிரதிபலிக்கின்றன, ஆனால் சூரியன் மட்டும் தன் சுய ஒளியில் பிரகாசிக்கிறது. எனவே சூரியனுக்கு சுயம் பிரகாசி என்று பெயர். எனவே எதிலும் ஒரு தனித்தன்மை, சுய திறமை, உள்ளுணர்வு , சுயபுத்தி சுயசார்பு அல்லது தற்சார்பு, சுயம்பு இவைகளைக்குறிப்பது சூரியனாகும்.

நன்றி திரு சித்தயோகி சிவதாசன் ரவி

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்